சில வருடங்களுக்கு முன்பு தாம்பரத்தில் இருக்கும் தன்வந்திராலயா ஆயுர்வேத மருத்துவமனைக்கு சென்றிருந்தோம். அங்கே தன்வந்திரி என்கிற சாமி வைத்து இருந்தார்கள்.
தேவர்களின் மருத்துவர் தன்வந்திரி என்றும், அவர் விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுகிறார்; ஆயுர்வேதத்தின் கடவுள் என்று புராணங்களில் குறிப்பிடப்படுகிறார் என்றும் அப்போது தான் தெரிந்துக் கொண்டேன். வாலாஜாபேட்டையில் தன்வந்திரி கோயில் ஒன்று இருக்கிறது என்றும் அதன் பிறகு தெரிய வந்தது. அன்றிலிருந்து அந்த கோயிலுக்கு ஒரு நாள் செல்லலாம் என்று பலமுறை முயற்சி செய்தும், நண்பர்களோடு சேர்ந்து செல்லலாம் என்று திட்டமிட்டாலும் போக முடியாமல் போனது.
இந்த முறை வேலூர் வழியாக பெங்களூரு செல்லும் போது அங்கே சென்றுவிட்டு பயணத்தை தொடரலாம் என்று முதலில் அங்கே தான் சென்றோம். நான் என்னவோ ஒரு பழமையான கோயிலாக இருக்கும் என்று மிகவும் ஆவலோடு சென்றேன். அதை பற்றி பெரிதாக தேடல் எதுவும் இல்லாமல் சாதரணமாக கணவரின் வழிகாட்டுதலோடு சென்றேன். அங்கே சென்ற பிறகு தான் தெரிந்தது. அது ஸ்ரீ தன்வந்த்ரி ஆரோக்கிய பீடம் யாக பூமி என்று.
உள்ளே செல்லும்போது அலைபேசி வாங்கி வைத்து கொண்டார்கள். அதற்கும் பணம் தான். இலவசமாக அல்ல. நுழைவு கட்டணம் ஒருவருக்கு பத்து ரூபாய் என்று வாங்கிக் கொண்டார்கள். பெரிய கருடர் சிலை ஆரம்பித்து அங்கே தொடங்கி உள்ளே நிறைய சாமி சிலைகள் மற்றும் சித்தர்கள் என்று எல்லாம் சுத்த விட்டு கடைசியாக பெருமாள் சிலைக்கு வந்தோம்.
ஒவ்வொரு சாமியிடமும் இதை செய்யுங்கள் அதை செய்யுங்கள் என்று எல்லா இடத்திலும் காசு கேட்டு பரிகாரம், திருஷ்டி, வாஸ்து, யாகம், அபிஷேகம், பூஜை என்று என்னவெல்லாமோ சொல்லி அங்கங்கே மஞ்சல், கடுக்காய், மிளகாய் போன்ற பொருட்கள் வைத்து இருந்தார்கள். என்னடா இது? என்றாகி விட்டது. எப்போது வெளியே வருவோம் என்று தோன்றி விட்டது.
அது கூட பரவாயில்லை ஏதோ காசு பார்க்க முயற்சிக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். விரும்பாதவர்கள் எதுவும் செய்ய வேண்டாம் என்று வந்து விடலாம். ஆனால் முக்கியமான சாமியான தன்வந்திரி இருக்கும் இடத்திற்கு வந்தால் சாமி கழுத்தில் ஸ்டதெஸ்கோப் போட்டு இருந்தார்கள், அருகில் தனியாக இருக்கும் லட்சுமிக்கும் போட்டு இருந்தார்கள். தட்டில் காசு போட்டால் தான் தரிசனம் என்பது போல, அதன் பிறகே ஆரத்தி எடுக்கப்பட்டு இவர் தான் டாக்டர் கடவுள் பாருங்க, எல்லா நோயும் தீரும், கழுத்துல ஸ்டெதெஸ்கோப் போட்டு இருக்காரு பாருங்க என்றெல்லாம் சொன்னார்கள். சாமி கும்பிடும் மனமே போய் விட்டது. எளியோருக்கும் புரியும்படி அதை செய்து இருந்தாலும் ஏனோ மனம் ஒப்பவில்லை. அலோபதி வேண்டாம் என்று தான் ஆயிர்வேதத்தை தேடி வருகிறார்கள். அதை தோற்றுவித்த கடவுளுக்கே இப்படியா? போதுமடா சாமி என்று வெளியே ஒரு வழியாக வந்தோம். கொடுத்த பத்து ரூபாய்க்கு குங்கும பிரசாதத்தோடு கூடவே ஏதோ யாக விளம்பர குறிப்பு வேறு.
போனதற்கு ஒரே ஒரு விஷயம் தான் பிடித்திருந்தது. எல்லா சாமியும் வைத்து இருந்த இடத்தில் புத்தர், குருநானக்கோடு மஹாவீரரையும் வைத்து இருந்தார்கள். ஆனால் எல்லோருக்கும் எளிதாக தெரியும்படி இல்லாமல் சற்று உள்ளே வேறு திசை நோக்கி இருந்தது. சுற்றி வந்து அந்த பக்கம் பார்த்தால் மட்டுமே தெரியும். யாரும் வெகுவாக வந்து ஓரமாக நின்று தரிசனம் செய்ய மாட்டார்கள். ஆனாலும் அந்த சிறிய கோயிலிக்குக் மஹாவீரர் ஜெயின் கோயில் என்று வெளியே பெரிதாக எழுதி இருந்தார்கள். அது மட்டுமே ஆறுதல்.
சுற்று பகுதி முழுவதும் புழுதியோடே இருந்தது. கோயிலுக்கு (சாரி ஆரோக்ய பீடம் ) சென்ற அமைதியும் திருப்தியும் சிறிதும் கிடைக்க வில்லை. எனினும் எந்த மாதிரி அனுபவமாக இருந்தாலும், செல்ல வேண்டும் என்ற நினைத்து இருந்த இடத்திற்கு வந்து சென்றோம் என்ற அனுபவம் மட்டுமே மீதம் இருந்தது.