வியாழன், 12 பிப்ரவரி, 2026

தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்

தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் விளையாட்டுகள், உடல் வலிமையையும் மன ஒருமைப்பாட்டையும் பாரம்பரியத்தையும்  வளர்ப்பதோடு, சமூக ஒற்றுமையையும் வலியுறுத்துகின்றன.


தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள் சிலவற்றை பற்றி இங்கே காணலாம்.


இயற்கை சார்ந்தது: பெரும்பாலும் இயற்கையான பொருட்களான புளியங்கொட்டை, கற்கள், மணல், பனை ஓலை போன்றவற்றைப் பயன்படுத்தி இந்த விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன.


பல்லாங்குழி: பன்னிரண்டு குழிகள் கொண்ட பலகையில், புளியம்பழ விதைகள் அல்லது சோழிகளைக் கொண்டு விளையாடப்படும் இது, சிந்தனைத் திறனையும் கணக்குத் திறனையும் வளர்க்கிறது.


தாயம்: கவட்டைக்காய்களை உருட்டி, தந்திரமாக நகர்த்தி விளையாடும் தாயம், கணித அறிவுக்கும் திட்டமிடும் திறனுக்கும் சிறந்த எடுத்துக்காட்டு.


கபடி: உடல் வலிமை, மூச்சுப் பயிற்சி மற்றும் குழு உணர்வை வளர்க்கும் வீர விளையாட்டு.


பம்பரம் & கோலிக்குண்டு: சிறுவர்கள் விரும்பி விளையாடும், கவனத்தையும் கைகளின் திறனையும் அதிகரிக்கும் விளையாட்டுகள்.


விளையாட்டின் நோக்கம்: தாயம், பல்லாங்குழி போன்றவை நினைவாற்றலை மேம்படுத்தவும், சிலம்பாட்டம் தற்காப்புக் கலையாகவும், நொண்டி, பச்சைக்குதிரை போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன.


இவ்விளையாட்டுகள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்லாமல், தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்து, நம் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பண்பாட்டு அடையாளங்களாகும்.





இது போன்ற தமிழ் பாரம்பரிய விளையாட்டுகளை நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். இந்த விளையாட்டுகள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல உடல் மற்றும் மன வலிமை தருபவை. இந்த விளையாட்டுகளை அதிகமாக விளையாட நாம் நம் குழந்தைகளை வெகுவாக ஊக்குவிக்க வேண்டும். இதனால் அவர்கள் மிகவும் மகிழ்வார்கள்; பயனும் பெறுவார்கள்.


இது போன்ற விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்த நாம், நம் குழந்தைகளுக்கு அதற்கான சூழலை உருவாக்க மறந்து விடுகிறோம். விடுமுறை நாட்களில் கிராமங்களுக்கு அவர்களை அழைத்து செல்வோம். அவர்களுக்கு நம் பாரம்பரிய விளையாட்டுகளை சொல்லிக் கொடுத்து வளர்ப்போம். மேலும் மீண்டும் மீண்டும் விளையாட ஊக்குவிக்கப்போம். நாமும் அவர்களோடு சேர்ந்து விளையாடி மகிழ்வோம் .


நேரம் கிடைக்கும்போது நாம் நம் பாரம்பரிய விளையாட்டுகளை நம் குழந்தைகளோடு விளையாடி மகிழ்வதால் நாமும் நம் சிறு வயது பருவ நாட்களுக்கு சென்று விடுவோம். சிறிது நேரம் குழந்தைகளாகவும் மாறி விடுவோம். 

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025

அழகு

  


சின்ன சின்ன விஷயங்களையும் வெவ்வேறு விதமாக பார்க்கும் கலையை குழந்தைகளிடமிருந்தே கற்றுக் கொள்கிறேன். அவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் ஆச்சரியங்களும் அற்புதம் என்று பாராட்டவும், எப்படி இப்படியெல்லாம் யோசித்தீர்கள்? என்று கேட்டு மகிழ்ச்சி கொள்ளவும் வைக்கிறார்கள்.


அவர்களின் உலகத்தை தூர நின்று பார்த்து ரசிப்பதில் திகட்டாத ஆனந்தம்.


பிறந்தநாள் முடிந்து பத்து நாட்கள் ஆன பிறகும் அலங்காரம் செய்த சுவர் அப்படியே இருக்க, ஒவ்வொரு பலூனாக காலியாகி கொண்டே இருந்தது. அந்த இடத்தில் இருந்த இரு பக்க சுவரொட்டியில் அவர்களின் பொம்மைகளை ஒட்டி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.


 "அம்மா..  இங்க பாரு...! "என்று சொன்னதும், 

எல்லா சூப்பர்மேன்களும் நிஜமாக உருவெடுத்தது போல இருந்தது. 


அவர்கள் செய்யும் செயல் ஒவ்வொன்றும் ஆச்சரியமும் அற்புதமும் அடங்கி இருக்கும். ஒவ்வொரு நாளும் அவர்களின் உலகம் குறித்து ஒரு துள்ளல் ஏற்படுவது ஏன்? நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன்? ஆச்சரியம் கொள்ளாமல் மகிழாமல் யாருடனும் பகிர்ந்துக் கொள்ளாமல் இருப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது.


குழந்தைகளாக இருக்கும் போதும் குழந்தைகளோடு இருக்கும் வரையும் 




எல்லாம் அழகாகாவும், இன்பமாகவும் அற்புதமாகவும் தெரிகிறது.


சனி, 19 ஏப்ரல், 2025

அலை கடல்


 உன் ஆர்ப்பரிக்கும் அலைகளில் துவண்டு போன என் மனதை

முழுதாய் தழுவ வந்து தழுவாமல் போகிறாய் !


துள்ளி துள்ளி எனை அணைக்க வந்து

லேசாய் வருடி மட்டும் செல்கிறாய் !


காலை சூரிய ஒளியில் ஜொலிக்கும் உன் அழகை பார்த்து ரசிக்கும் என்னை

தொட்டு தொட்டு உன் அன்பை சொல்லாமல் சொல்லி செல்கிறாய் !


மெதுவாய் வந்து வந்து சென்றவள் சட்டென்று குதூகலமாய்

ஓடி வந்து கட்டிக் கொள்கிறாய் !


வெகு நேரமாய் ஏதோ நினைவில் மூழ்கி போன என்னை எழுப்ப விரும்பாமல்

பட்டும் படாமல் கண்டும் காணாமல் விலகி செல்கிறாய் !


என் மன அலைகளை எல்லாம் உன் அலைகளில் விட்டு செல்ல வந்த எனை

 துளியும் தயங்காமல் அள்ளி அரவணைத்து கொள்கிறாய் !


உன் அன்பின் ஆழத்தை வியந்து பார்க்கிறேன்

நீ என்னோடு கொண்ட உறவு 


என்றும் என் மனதிற்கு நெருங்கிய 

என் தோழியை போல !





சனி, 8 மார்ச், 2025

மார்கழி திங்கள்


காலை பணியில் எழுந்து மாட்டு சாணத்தில் நீர் தெளித்து கோலமிட்டு மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து குங்குமமிட்டு பூசணி பூவை நடுவில் வைத்து விளக்கேற்றும் காலம் இது.


இப்போதும் இதெல்லாம் எந்த காலமாயினும் நான் ஊருக்கு போனால் செய்வதுண்டு. விடிய விடிய அம்மா எழுவதற்கு முன்பு  எழுந்து நான் தான் கோலமிடுவேன் என்று அடம்பிடித்து தூங்கினாலும் எழுப்பி விட வேண்டும், நீங்கள் போடக் கூடாது என்று சொல்லி காலை நாலரை மணிக்கே எழுந்து சிறியதாக புள்ளி வைத்து ஆரம்பித்து பெரிதாக ஒரு சின்ன இடம் கூட விடாமல் எல்லா இடங்களையும் நிரப்பி விடுவேன்.


செஞ்சியில் இருக்கும் போது யார் வீட்டுக் கோலம் பெரிதாகவும் அழகாகவும் இருக்கிறது யார் வீட்டில் முதலில் கோலம் போட்டார்கள்?என்றெல்லாம் அந்த தெரு முழுக்க எங்களுக்குள் போட்டி இருக்கும். இன்னும் சொல்ல போனால் சில சமயம் அம்மா நீர் தெளித்து சுத்தம் செய்து கொடுத்து விடுவார்கள். கோலம் போடுவதற்கு என்னை எழுப்புவார்கள்.


விசேஷம் என்றால் நான் மட்டும் தான் போடுவேன். கலர் கோலமாவு வாங்க அப்பா காசு கொடுக்க மாட்டார். அதெல்லாம் வீண் என்று சொல்லுவார். அரிசி மாவே போதும் என்பார். நான் தான் அடம் பிடித்து பாட்டியிடம் காசு வாங்கி  கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைத்து பொங்கலுக்கு மட்டுமாவது போடுவதற்காக வாங்குவேன்.


இன்றும் எங்கள் வீட்டுக்கு போனால் அம்மாவுக்கு கோலம் போட லீவு. பாட்டி பிள்ளையார் பிடித்து பூ வைத்து விடுவார். பெரிதாக என் இஷ்டத்திற்கு அந்த நேரத்தில் என்ன தோன்றுகிறதோ போட்டுக் கொண்டே போவேன்.




இது போல சிக்கு கோலங்கள் மிகவும் பிடிக்கும். ஆனால் போடத் தெரியாது. பாட்டியிடம் கேட்டு ஒரு நோட்டு முழுக்க போட்டு வைத்து இருந்தேன். இதெல்லாம் என் ஞாபகத்தில் நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது ஆரம்பித்தது.


அப்போதெல்லாம் புள்ளி வைக்காத ரங்கோலி கிடையாது. பெரிய பெரிய புள்ளி வைத்த பூக்கோலம் போடுவது பிரபலம். ஆனால் பெரிய தொழிலதிபர்கள் வீட்டு வாசலில் ரோஜா வரைந்து பார்த்தது தான் முதல் அனுபவம்.


யார் வீட்டில் எது வரைந்து இருந்தாலும் அப்படியே பார்த்துக் கொண்டு வந்து வீட்டில் மறுநாள் போட்டு பார்ப்பேன். என் பாட்டிக்கு அவ்வளவு பெருமையாக இருக்கும். அவர்கள் பாராட்டுவதற்காகவே இன்னும் இது போன்ற நிறைய நிகழ்வுகளை நடத்துவேன்.


மார்கழி பணியில் காலையில் குளிர்ந்த நீரில் குளித்து ஆண்டாள் போல பெருமாளை பார்க்க கோயிலுக்கு சென்ற நினைவுகளும் உண்டு. அலுவலகம் காலை ஆறு மணிக்கு. அதற்கு முன் எழுந்து அருகிலேயே இருக்கும் பெருமாள் கோயிலுக்கு சென்று பஜனை மற்றும் பாராயணம் பாடுவதை கேட்க இனிமையாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும். கூடவே சுடச் சுட வெண்பொங்கல் பிரசாதம் கொடுப்பது காலை பசிக்கு இதமாக இருக்கும். அந்த உணர்வை உணர்ந்து முடிப்பதற்குள் அலுவலக வண்டி வந்து விடும்.



என்னை பார்த்து, நான் ரசித்து செல்வதை பார்த்து என்னோடு இருந்த என் அக்காக்களும் தோழிகளும் இணைந்து கொள்வார்கள். எனக்கு அந்த பெருமாள் கோயில் ஐயர் பரிசளித்த திருப்பாவை புத்தகம் கிழிந்து போய் இருந்தாலும் இன்றும் பூஜை அறையில் பத்திரமாக இருக்கிறது. 



"எம்பாவாய்..." என்று ஒவ்வொரு பாடலையும் பாடி முடிக்கும் போது அந்த வர்ணனையை கேட்க அதில் உள்வாங்கி நாமே அந்த இடத்தில் பயணம் செல்வது போல அங்கு இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.


மார்கழியில் ஒரு தெய்வீக உணர்வு உண்டு. அதன் மீது தீரா காதலும் உண்டு. 


செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

சுய ஒழுக்கம்

வார இறுதி நாட்களில் சுயஒழுக்கம் என்பதே இருக்காது. குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்து விடும் வேலை இல்லை என்ற ஒரே ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு சற்று தாமதமாக எழலாம் என்ற எண்ணம் எல்லாவற்றையும் புரட்டிப் போடும். காலை நடைப்பயிற்சியில் தளர்வு. மொட்டை மாடியிலே சென்று விடலாம்; இல்லையேல் மாலை நேரத்தில் சென்று கொள்ளலாம் என்று ஏகப்பட்ட வேறு வழிகளை தேடும் மனம்.


விடுமுறை நாட்களில் நமக்கு முன் குழந்தைகள் எழுந்து கொள்வார்கள். அப்படி ஒன்று இன்றும் நடக்க, உடனே பூங்காவிற்கு செல்லலாமா? என்று அவர் கேட்கவும் எல்லோரும் துள்ளி குதித்துக் கொண்டு கிளம்பி விட்டோம்.  சிறிது தளர்ந்து போன உடலும் மனமும் மீண்டும் துள்ளலோடு எழுந்து உற்சாகமாக பூங்காவிற்கு சென்று நடைப்பயிற்சியும் சென்றாகி விட்டது.


குழந்தைகளுக்கு விடுமுறை என்று காரணம் காட்டி இரவு வெகு நேரம் தொலைகாட்சி பார்ப்பது, பாட்டு கேட்பது, தாமதமாக உறங்குவது, காலையில் அதனால் இன்னும் சிறிது நேரம் படுக்கையிலேயே இருப்பது, காலை உணவில் ஆரம்பித்து நாள் முழுவதும் எல்லாமே தாமதமாக நடப்பது என்று இரண்டு நாட்களும் வேறு மாதிரியாக செல்லும்.


இதில் வெளியே செல்வது, சொந்த ஊருக்கு போவது, பூஜை, கோயில், கல்யாணம், விழாக்கள் என்று எல்லாவற்றையும் கூடவே சேர்த்துக் கொண்டு காரணம் தேடி செய்யும் வேலையில் நியாயம் கண்டு பிடித்து தனக்குத்தானே சமாதானம் சொல்வதும் எதிர் தரப்பில் யாராவது கேள்வி கேட்டாலும் இத்தனை இடையூறுகளில் எப்படி எல்லாவற்றையும் சரியாகச் செய்ய முடியும்? என்று கூறி அவர்களையும் தளர செய்யும் அளவிற்கு மனம் திடமாக இருக்கும்.


ஆனால் அதையெல்லாம் தகர்த்தி எந்த தடைகள் வந்தாலும் சுய ஒழுக்கத்தையும் மன உறுதியையும் கைவிட கூடாது என்று கடந்த சில நாட்களாக முயற்சி செய்வதுண்டு. அதில் ஒரு வியூகமாக இதைக் கடைப்பிடிக்கலாம் என்ற யோசனையில் உருவானது தான் குழந்தைகளையும் பூங்காவிற்கு அழைத்து செல்வது.


இந்த முறை ஒரு புத்தகத்தையும் எடுத்துச் சென்று இயற்கை சூழலில் சிறிது நேரம் வாசிக்க நேர்ந்தது சிறப்பு. ஆனால் இவர்களுக்காக தயாராவது ஒரு பெரிய ஆயத்தம். தண்ணீர், சிற்றுண்டி, விளையாட்டு பொருட்கள், தொப்பி, இன்னும் சேர்த்துக் கொண்டே போகும் அளவுக்கு அவர்களின் தேவைகள் நீளும்.



சுய ஒழுக்கம் கடைப்பிடித்தால் மட்டுமே வாழ்வில் முன்னேறி செல்ல முடியும். மனம் தளர்வடையும் போது அதை தயார் படுத்த நாம் என்னவாக விரும்புகிறோம் என்று ஒரு நிமிடம் நினைத்தாலே போதும் எழுந்து முயற்சியில் இறங்கி விடலாம். எந்த நேரத்திலும் காரணம் தேடி தன்னை நியாயப்படுத்தி ஒரு செயலை செய்யாமல் இருக்க ஆயத்தப் படுவதற்கு பதிலாக அதை செய்வதற்கு உற்சாகத்தை ஏற்படுத்திக் கொண்டு தொடர்ந்து செய்து தன்னைத் தானே பாராட்டி கொண்டு அடுத்த வேலைக்கு கடந்து செல்வது சிறப்பு. 


திங்கள், 17 பிப்ரவரி, 2025

பரீட்சை

 



பரீட்சை எப்படி இருந்துச்சு பாப்பா..?


அம்மா... ரொம்ப கஷ்டம்மா.. 


ஏன்டா..? நல்லா தான படிச்சிட்டு போனீங்க.


அம்மா..  அதெல்லாம் நம்ம படிக்காதது. படிக்கவே தெரியாது இல்ல.. பெரிய பெரிய கேள்வியா இருந்துச்சு. படிக்கவே முடியல.


ஆமா... அதுக்கு தான் நல்லா படிக்க தெரிஞ்சுக்கணும். நிறைய படிச்சு பழகணும்ன்னு சொல்றது.


மேம் படிச்சு காமிக்கலயா.. ?


இல்லம்மா... வேற மேம் வந்தாங்க. எதுவும் படிக்கல. ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொன்னாங்க. அவ்ளோதான்.


சரி,  நீ எல்லா கேள்விக்கும் பதில் குறிச்சியா இல்லையா ?


அதான் கேள்வியே படிக்க தெரிலயேம்மா.. எப்படி பதில் எழுதறது?

 

ஏன் பாப்பா.. ? அப்போ எல்லா கேள்விக்கும் பதில் எழுதலயா?

கேள்வி தெரிலனா என்ன? பதில் சின்னதாதான இருக்கும். அத படிச்சி பாத்து பதில் எதுவா இருக்கும்ன்னு போட்டு இருக்கலாம்-ல.. 


அம்மா..! என்னம்மா நீ.. !


கேள்வி தெரியாமா பதில் மட்டும் எப்படிம்மா எழுத முடியும். 

முதல்ல கேள்வி படிக்க தெரிஞ்சா தான பதில் எதுன்னு தெரியும்.


அவ்வ்வ்வ் ...!


அச்சோ... ! என் செல்லகுட்டி. எவ்ளோ அழகா சொல்லுது. ஆமான்டா செல்லம் கேள்வி தெரிஞ்சா தான் பதில் எழுத முடியும். நம்ம சீக்கிரமா இன்னும் நல்ல படிக்க கத்துக்கலாம். 


குழந்தைங்க கிட்ட குறுக்கு வழிய நம்மளே சொல்ற மாதிரி ஆயிடுச்ச்சேச்சேன்னு ஒரு மாதிரி ஆயிடுச்சு. ஆனா அவங்களோட  அழகிய மனசு இருக்கே... !  


செவ்வாய், 21 ஜனவரி, 2025

பொங்கலோ பொங்கல்!

 

பின்னிரவு 2 மணிக்கு எழுந்து செம்மண்ணால் முன் வாசல் மற்றும் அடுப்பையும் மொழுவி வண்ண கோலமிட்டு பூ வைத்து அலங்கரித்து பின் தலை குளித்து புடவை உடுத்தி விளக்கேற்றி மாவிளக்கு போட்டு வைத்து அதற்குப்பின் பொங்கல் படையலுக்கான அனைத்து வேலைகளிலும் இறங்கும்போது காலை 6 மணி ஆகிவிடுகிறது. ஏழு வகையான பொரியல் அடுப்பில் வைத்து பொங்கிய பொங்கல் சாதம் பிடி கருணை சாம்பார் பின்பு பருப்பு பாயசம் என்று அனைத்தையும் தயார் செய்து படையல் இட்டு உறவினர்களை அழைத்து சாமி கும்பிட்டு வாழ்த்து சொல்லலாம் என்று அமரும்போது காலை 11:00 மணி ஆகிவிடுகிறது. இதில் ஆண்களுக்கு பெரிய வேலை என்னவென்றால் வாழை இலை வெட்டி தருவதும் கற்பூரம் காட்டுவதும் முதல் படையலை எடுத்து வைத்து அமர்ந்து சாப்பிடுவதும் தான்.


இதில் நகரத்து சர்க்கரை பொங்கலை விட கிராமத்து பொங்கல் தான் அழகு என்று சொல்வது வருத்தமாக தான் உள்ளது. வேலை செய்பவர்களுக்கு தான் தெரியும் அதன் கஷ்டம். இருந்தாலும் எல்லாவற்றையும்  செய்து கொடுத்து மற்றவர்களை மகிழ்வித்து பார்ப்பதில் ஒரு ஆத்ம திருப்தி இருப்பதால் மட்டும்தான் இன்னும் உறுதியோடு எல்லா வேலையையும் இழுத்து போட்டு செய்கிறது பெண்ணின் மனம். 


பிறகு வீட்டில் எல்லோருக்கும் பொங்கல் படையல் சாப்பிட்டுவிட்டு உறக்கம் வர ஆனால் நாம் மட்டும் துணி துவைத்து விட்டு அரிசி மாவு கோலம் மற்றும் கூடவே வெள்ளை பெயிண்டில் கோலம் என்று போட ஆரம்பித்து விட்டால் மணி இரண்டு ஆகி விடும் . மறுபடியும் மதிய சாப்பாடு என்று எழுந்து வந்து விடுவார்கள். அதன் பிறகு குழந்தைகளுக்கு உணவு கொடுத்து விட்டு பாத்திரத்தை எல்லாம் கழுவி சுத்தம் செய்து எழுந்திருக்கும் பொழுது மணி மூன்று ஆகி விடுகிறது. மாலை 4:00 மணிக்கு எல்லாம் பகவான் பாகுபலிக்கு பூஜை என்று கிளம்ப, திரும்ப ஒரு மணி நேரம் கழித்து வந்து தேநீர் போட்டு தந்து மகரஜோதி பார்ப்பதற்காக ஐயப்பன் கோயிலுக்கு சென்று வந்த பிறகு ஜவாலாமாலினி அம்மனுக்கு சுக்ரவாரம் செய்ய கோயிலுக்கு சென்று வந்து இரவு உணவுக்கு எல்லா பொரியலையும் சாம்பாரில் போட்டு கொதிக்க வைத்து தோசை ஊற்றி திரும்பவும் பாத்திரங்களை சுத்தம் செய்து படுக்கையிட்டு உறங்குவதற்குள் இரவு மணி 11 ஆகி விடுகிறது. 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 20 மணி நேரம் சற்றும் அமரக் கூட முடியாமல் முழுதும் வேலை செய்து கொண்டே இருக்கிறோம். 





மறுநாள் மாட்டு பொங்கல் அன்று  இதைவிட அதிகமான வேலை. இதே போல பொங்கல் சாதம் பொரியல் வகைகள் பால் பாயசம் இதெல்லாம் செய்வதோடு கூடவே பஜ்ஜி மற்றும் எப்போதும் போல மதிய உணவு சாம்பார், சாதம், ரசம் என்று அனைத்தையும் செய்ய வேண்டும். அதன் பிறகு படையல் இடுவதற்கு மாடு, வண்டி என்று எல்லாவற்றையும் சுத்தம் செய்து அலங்காரமிட்டு படைப்பதற்குள் மாலை 6 மணி ஆகிவிடிகிறது.  மாட்டுப் பொங்கல் அன்று காலையில் திருவிழாவும் உண்டு. அதற்காக காலை சிற்றுண்டி செய்து வைத்து விட்டு தயாராகி சென்று வந்து மறுபடியும் வேலையை அவசரமாக ஆரம்பித்து மதிய உணவு வேளைக்குள் எல்லா வேலையையும் முடித்து வண்டிகளுக்கு படைத்து ஊரை சுற்றி ஊர்வலம் சென்று வந்து அமர்வதற்குள் பொங்கல் விழா முடிந்து விடுகிறது. இதில் எங்கிருந்து நேரம் எடுத்து வாழ்த்து சொல்லுவது, உறவுகளை அழைத்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வது என்றே தெரிவதில்லை. ஒவ்வொரு பொங்கலும் இப்படி தான் செல்கிறது. 


இப்படி எல்லாம் வருடா வருடம் பொங்கல் செல்கிறது.  ஆனால் ரொம்பவும் இலகுவாக சொல்லிவிடலாம் நகரத்து சக்கரை பொங்கலை விட கிராமத்து பொங்கல் தான் சிறப்பு என்று. அதில் எவ்வளவு சிரமம் இருக்கிறது என்பதை ஆண்கள் சிறிது உணர வேண்டும். வண்டி கழுவுவதை தவிர்த்து வேறு ஏதாவது அவர்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டும். அத்தனை சம்பிரதாயங்களையும் தகர்க்க வேண்டும் என்று இல்லை. அதில் எது தேவையானது தேவையற்றது என்று உணர்ந்து அதற்கு ஏற்றார் போல வேலையை குறைத்துக் கொள்வதும் எளிமையாக நம் வாழ்வை மேம்படுத்திக் கொள்வதிலும் தவறேதுமில்லை. இப்படியெல்லாம் சொன்னால் வருடத்தில் ஒரு நாள் தானே!  என்றும் சொல்லி விடுகிறார்கள். ஆனால் வருடத்தில் ஒரு நாள் என்று எத்தனை விழாக்கள் வருகின்றன. அவ்வாறு எத்தனை சம்பிரதாயங்கள்? எவ்வளவு வேலைகள்? அதனால் உடல் உபாதைகள் அது ஏற்படுத்தும் சோர்வுகள் என்றெல்லாம் எண்ணி பார்க்க வேண்டும். அத்தனையும் தாண்டி இதெல்லாம் நிஜமாகவே தேவையா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அதனால் நன்மைகள் இருக்கின்றனவா? ஏதேனும் பயன் இருக்கிறதா? என்று யோசித்துப் பார்க்க வேண்டும். அதில் மகிழ்ச்சி இருக்கிறது என்பது உண்மை தான். அதேபோல் அத்தனையும் கட்டாயமாக தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் இல்லை. நமது வசதிக்கு ஏற்பவும் காலத்திற்கு ஏற்றார் போலவும் நம்மை சிறிது மாற்றி கொள்வதில் தவறேதும் இல்லை. அதனால் குறை ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும். அப்படி செய்தால் பொங்கல் விழா மட்டுமல்ல எல்லா விழாக்களும் சிரமமின்றி  எப்போதும் சிறக்கும்.