பின்னிரவு 2 மணிக்கு எழுந்து செம்மண்ணால் முன் வாசல் மற்றும் அடுப்பையும் மொழுவி வண்ண கோலமிட்டு பூ வைத்து அலங்கரித்து பின் தலை குளித்து புடவை உடுத்தி விளக்கேற்றி மாவிளக்கு போட்டு வைத்து அதற்குப்பின் பொங்கல் படையலுக்கான அனைத்து வேலைகளிலும் இறங்கும்போது காலை 6 மணி ஆகிவிடுகிறது. ஏழு வகையான பொரியல் அடுப்பில் வைத்து பொங்கிய பொங்கல் சாதம் பிடி கருணை சாம்பார் பின்பு பருப்பு பாயசம் என்று அனைத்தையும் தயார் செய்து படையல் இட்டு உறவினர்களை அழைத்து சாமி கும்பிட்டு வாழ்த்து சொல்லலாம் என்று அமரும்போது காலை 11:00 மணி ஆகிவிடுகிறது. இதில் ஆண்களுக்கு பெரிய வேலை என்னவென்றால் வாழை இலை வெட்டி தருவதும் கற்பூரம் காட்டுவதும் முதல் படையலை எடுத்து வைத்து அமர்ந்து சாப்பிடுவதும் தான்.
இதில் நகரத்து சர்க்கரை பொங்கலை விட கிராமத்து பொங்கல் தான் அழகு என்று சொல்வது வருத்தமாக தான் உள்ளது. வேலை செய்பவர்களுக்கு தான் தெரியும் அதன் கஷ்டம். இருந்தாலும் எல்லாவற்றையும் செய்து கொடுத்து மற்றவர்களை மகிழ்வித்து பார்ப்பதில் ஒரு ஆத்ம திருப்தி இருப்பதால் மட்டும்தான் இன்னும் உறுதியோடு எல்லா வேலையையும் இழுத்து போட்டு செய்கிறது பெண்ணின் மனம்.
பிறகு வீட்டில் எல்லோருக்கும் பொங்கல் படையல் சாப்பிட்டுவிட்டு உறக்கம் வர ஆனால் நாம் மட்டும் துணி துவைத்து விட்டு அரிசி மாவு கோலம் மற்றும் கூடவே வெள்ளை பெயிண்டில் கோலம் என்று போட ஆரம்பித்து விட்டால் மணி இரண்டு ஆகி விடும் . மறுபடியும் மதிய சாப்பாடு என்று எழுந்து வந்து விடுவார்கள். அதன் பிறகு குழந்தைகளுக்கு உணவு கொடுத்து விட்டு பாத்திரத்தை எல்லாம் கழுவி சுத்தம் செய்து எழுந்திருக்கும் பொழுது மணி மூன்று ஆகி விடுகிறது. மாலை 4:00 மணிக்கு எல்லாம் பகவான் பாகுபலிக்கு பூஜை என்று கிளம்ப, திரும்ப ஒரு மணி நேரம் கழித்து வந்து தேநீர் போட்டு தந்து மகரஜோதி பார்ப்பதற்காக ஐயப்பன் கோயிலுக்கு சென்று வந்த பிறகு ஜவாலாமாலினி அம்மனுக்கு சுக்ரவாரம் செய்ய கோயிலுக்கு சென்று வந்து இரவு உணவுக்கு எல்லா பொரியலையும் சாம்பாரில் போட்டு கொதிக்க வைத்து தோசை ஊற்றி திரும்பவும் பாத்திரங்களை சுத்தம் செய்து படுக்கையிட்டு உறங்குவதற்குள் இரவு மணி 11 ஆகி விடுகிறது. 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 20 மணி நேரம் சற்றும் அமரக் கூட முடியாமல் முழுதும் வேலை செய்து கொண்டே இருக்கிறோம்.
மறுநாள் மாட்டு பொங்கல் அன்று இதைவிட அதிகமான வேலை. இதே போல பொங்கல் சாதம் பொரியல் வகைகள் பால் பாயசம் இதெல்லாம் செய்வதோடு கூடவே பஜ்ஜி மற்றும் எப்போதும் போல மதிய உணவு சாம்பார், சாதம், ரசம் என்று அனைத்தையும் செய்ய வேண்டும். அதன் பிறகு படையல் இடுவதற்கு மாடு, வண்டி என்று எல்லாவற்றையும் சுத்தம் செய்து அலங்காரமிட்டு படைப்பதற்குள் மாலை 6 மணி ஆகிவிடிகிறது. மாட்டுப் பொங்கல் அன்று காலையில் திருவிழாவும் உண்டு. அதற்காக காலை சிற்றுண்டி செய்து வைத்து விட்டு தயாராகி சென்று வந்து மறுபடியும் வேலையை அவசரமாக ஆரம்பித்து மதிய உணவு வேளைக்குள் எல்லா வேலையையும் முடித்து வண்டிகளுக்கு படைத்து ஊரை சுற்றி ஊர்வலம் சென்று வந்து அமர்வதற்குள் பொங்கல் விழா முடிந்து விடுகிறது. இதில் எங்கிருந்து நேரம் எடுத்து வாழ்த்து சொல்லுவது, உறவுகளை அழைத்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வது என்றே தெரிவதில்லை. ஒவ்வொரு பொங்கலும் இப்படி தான் செல்கிறது.
இப்படி எல்லாம் வருடா வருடம் பொங்கல் செல்கிறது. ஆனால் ரொம்பவும் இலகுவாக சொல்லிவிடலாம் நகரத்து சக்கரை பொங்கலை விட கிராமத்து பொங்கல் தான் சிறப்பு என்று. அதில் எவ்வளவு சிரமம் இருக்கிறது என்பதை ஆண்கள் சிறிது உணர வேண்டும். வண்டி கழுவுவதை தவிர்த்து வேறு ஏதாவது அவர்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டும். அத்தனை சம்பிரதாயங்களையும் தகர்க்க வேண்டும் என்று இல்லை. அதில் எது தேவையானது தேவையற்றது என்று உணர்ந்து அதற்கு ஏற்றார் போல வேலையை குறைத்துக் கொள்வதும் எளிமையாக நம் வாழ்வை மேம்படுத்திக் கொள்வதிலும் தவறேதுமில்லை. இப்படியெல்லாம் சொன்னால் வருடத்தில் ஒரு நாள் தானே! என்றும் சொல்லி விடுகிறார்கள். ஆனால் வருடத்தில் ஒரு நாள் என்று எத்தனை விழாக்கள் வருகின்றன. அவ்வாறு எத்தனை சம்பிரதாயங்கள்? எவ்வளவு வேலைகள்? அதனால் உடல் உபாதைகள் அது ஏற்படுத்தும் சோர்வுகள் என்றெல்லாம் எண்ணி பார்க்க வேண்டும். அத்தனையும் தாண்டி இதெல்லாம் நிஜமாகவே தேவையா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அதனால் நன்மைகள் இருக்கின்றனவா? ஏதேனும் பயன் இருக்கிறதா? என்று யோசித்துப் பார்க்க வேண்டும். அதில் மகிழ்ச்சி இருக்கிறது என்பது உண்மை தான். அதேபோல் அத்தனையும் கட்டாயமாக தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் இல்லை. நமது வசதிக்கு ஏற்பவும் காலத்திற்கு ஏற்றார் போலவும் நம்மை சிறிது மாற்றி கொள்வதில் தவறேதும் இல்லை. அதனால் குறை ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும். அப்படி செய்தால் பொங்கல் விழா மட்டுமல்ல எல்லா விழாக்களும் சிரமமின்றி எப்போதும் சிறக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக