நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது எங்கள் பள்ளியில் ஒவ்வொரு மாதமும் இரண்டு சனிக்கிழமைகளில் அரை நாள் வகுப்புகள் நடக்கும். அதில் முதல் இரண்டு வகுப்புகள் மட்டுமே அந்த வாரங்களில் விடுபட்ட பாடங்களையோ அல்லது பயிற்சி வகுப்புகளையோ ஆசிரியர்கள் எடுப்பார்கள். மீதி இரண்டு வகுப்புகள் சிறப்பான கலை நிகழ்ச்சிகளுக்காக ஏற்பாடு செய்திருப்பார்கள்.
சனிக்கிழமை என்றால் எங்கள் எல்லோருக்குமே பள்ளிக்கு வருவதில் ஒரு ஆனந்தம் உண்டு. தங்கள் ஆளுமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக கருதி ஒவ்வொரு மாணவரும் அவரவரின் விருப்பப்படி பள்ளிக்கு வருவார்கள். அதனால் சனிக்கிழமை எல்லோர் முகத்திலும் புன்னகையோடு தான் இருக்கும்.
அப்படியான சிறப்பான வகுப்புகளில் ஒவ்வொரு முறையும் பொம்மலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், வில்லு பாட்டு, தெருக்கூத்து சிலம்பாட்டம், மத்தளம் போன்ற இசை நிகழ்ச்சிகள், பாரம்பரிய கலைஞர்களை அழைத்து வந்து கச்சேரி நடத்த செய்வார்கள்.
கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் வரை மிகவும் சுவாரஸ்யமாக செல்லும். மதியம் ஒரு மணி அளவில் நாங்கள் எல்லோரும் மதிய உணவிற்காக வீட்டிற்கு இந்த நினைவுகளை ஏந்திக்கொண்டு, அதை பற்றி சிந்தனை செய்துக் கொண்டே செல்வோம்.
நிகழ்ச்சி முடியும்போது நிர்வாகத்தில் இருக்கும் ஆசிரியர்கள், எங்களை மேலும் உற்சாகப்படுத்த எம்.ஜி.ஆர் பாடல்கள் எல்லாம் போடுவார்கள். அதேபோல ஒவ்வொரு ஆசிரியருக்கும் அவரது குணாதிசயங்களை பொறுத்து பாடல்கள் போடுவதும், மாணவர்களை மகிழ்ச்சிக்குள் உள்ளாக்குவதும் அவர்களுடைய வேலையாக இருக்கும். அப்படி அழகாக ஒவ்வொரு பாரம்பரிய கலைகளையும் ரசித்து அனுபவித்த நாட்கள் அவை.
அப்போதெல்லாம் "வளரும் இளமை" என்று ஒரு தனி வகுப்பு இருந்தது. அந்த வகுப்பில் செடிகளை நடுவது, தண்ணீர் ஊற்றுவது, களைகளை எடுப்பது, பள்ளி வளாகங்களை சுத்தம் செய்வது, கழிவறைகள் முதல் கொண்டு எல்லாமே மாணவர்களின் கைகளில் இருக்கும்.
அடிக்கும் பம்பில் தண்ணி அடிப்பது மாணவர்கள் வேலையாகவும், குடங்களில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு செடிகளுக்கு கொண்டுபோய் ஊற்றுவது மாணவிகள் வேலையாகவும், பெருக்குவது பெண்கள் என்றும், குப்பைகளை அள்ளிக் கொண்டு போவது ஆண்கள் என்றும், இப்படி சரியாக வேலைகளை பிரித்து எல்லோரும் ஒற்றுமையாக இதுவும் நம் வீடு என்பது போல பள்ளிக்கூடமும் மாணவர்களின் கைகளில் தான் இருக்கும்.
அதைப்போல வாயிலில் இருந்து பள்ளி வளாகம் முழுவதும் எந்த பக்கம் செல்ல வேண்டும் என்றாலும் மாணவர்களின் கால்கள் ஓடிக் கொண்டேதான் இருக்க வேண்டும். அந்த சுறுசுறுப்பு என்பது எப்போதும் வேண்டும் என்பதை தலைமையாசிரியர் தலை தெரிந்தால் போதும் எல்லோரும் தலைத் தெறிக்க ஓடுவார்கள்.
எங்கள் பள்ளியில் பதினோராம், பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு "லெசிம்" (lezim) கற்றுத் தருவார்கள். அவர்கள் கைகளிலே கோலாட்டம் போல சலங்கை ஒலி எழுப்பி ஆடுவார்கள். இது மகாராஷ்டிராவின் நாட்டுப்புற நடனம் ஆகும். பார்க்கவும் கேட்கவும் அவ்வளவு அழகாக இருக்கும். எங்கள் அனைவரையும் வெகுவாக ஈர்க்க கூடிய ஒரு கலை. அதற்காகவே எப்போது 11-ஆம் வகுப்பு செல்வோம், அதை எப்போது கையிலேந்தி ஆடுவோம் என்றெல்லாம் நாங்கள் காத்துக் கொண்டிருந்த காலமும் உண்டு.
பொம்மலாட்டம் என்று பெயருக்காக மட்டுமே இருக்கிறதே தவிர அன்றிருந்த அந்த நேர்த்தியான பொம்மைகளும், திரைகளும், அழகான இசையும், அந்த வார்த்தை கம்பீரமும், பழங்காலத்து கதையில் கூட அவர்களது முற்போக்கு சிந்தனையும், தொலைதூர சிந்தனையும் தென்படும் அளவில் கலைஞர்கள் வெளிப்படுத்துவதும், அவ்வளவு சிறப்பாக இருக்கும்.
ஆனால் இன்றோ இந்த கலை அழிந்து விட க்கூடாது என்பதற்காக கடமைக்காக மட்டுமே சில இடங்களில் வைத்திருக்கிறார்களே தவிர, காமெடி என்ற பெயரில் இன்றைய கேளிக்கை மொழிகள் பேசி, கதையின் கருவையும் எடுத்துவிட்டு ஏனோதானோ என்று மட்டுமே இருக்கிறதை பார்க்கும்போது கலைஞர்கள் திரிந்துவிட்டார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இருக்கும் கலைஞர்களாவது அதை செவ்வனே செய்யவேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி இல்லாமல் வாழ்வாதாரம் இருந்தால் போதும் என்பது போல் ஆகிவிட்டது.
அதை திறம்பட நன்றாக வளர்க்க வேண்டும் என்று நிறைய மனிதர்கள் உதவி புரிகிறார்கள். முன்னேற்றிக் கொண்டும் வருகிறார்கள் என்பதை கண்கூடாக பார்க்க முடிந்தாலும் அன்று பார்த்த பொம்மலாட்டம் இன்று பரிணாம வளர்ச்சி என்ற பெயரில் வேறு பாதைத் தேடி செல்கிறது. அதில் எந்த பயனும் இல்லை என்பதை நினைக்கும் போது மனம் சற்று சலனப்படவே செய்தது.
சிறு குழந்தைகளுக்கு இந்த கலையை கற்றுத் தரவேண்டும் என்பதை விட இந்த கலையை பார்த்து ரசிக்கும் ஆர்வத்தையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் அதிகமாக மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
